குறிப்பு : 25ல் முடியும் எண்களுக்கு மட்டும் இந்த உத்தி பயன்படும்
போகப் போக மின்னல் கணிதத்தை எனக்குப் பதிலாக இதை வாசித்துக் கொண்டிருக்கின்ற மாணவ மாணவிகளே எழுதிவிடுவார்கள் என நினைக்கிறேன். எதனால் இப்படிச் சொல்கிறேன் என்றால் இந்த ஸ்கொயர் ரூட் உத்தியை நான் எழுதவில்லை. இந்த உத்தியை தானே கண்டுபிடித்து, பரிசோதித்து பின்னர் உதாரணங்களுடன் எழுதி அனுப்பியுள்ள மாணவியின் பெயர் ஆர்.வந்தனா. இவர் செயின்ட் ஆலொஷியஸ் ஆங்கிலோ இந்தியன் ஹையர் செகண்டரி பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார்.
5ல் முடியும் எண்களை எப்படி ஸ்கொயர் செய்வது என முன்பு எழுதியிருந்தேன். அதை வாசித்துவிட்டு, பொழுதைப் போக்குவதாக நினைத்துக் கொண்டு, டிவி பார்த்து கண்ணைக் கசக்காமல், மூளையைக் கசக்கி ஸ்கொயர் ரூட்டுக்கு ஒரு மின்னல் டெக்னிக் கண்டுபிடித்திருக்கிறார். வாழ்த்துக்கள். இனி அவர் எழுதி அனுப்பியுள்ள உதாரணங்களைப் பார்க்கலாம்.
ஸ்கொயர் ரூட் கண்டுபிடிக்க என்ன செய்ய வேண்டும்?
ஸ்டெப் - 1
எந்த எண்ணையும் இரு பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளவேண்டும்.
725 என்றால் 7 மற்றும் 25
2025 என்றால் 20 மற்றும் 25
9025 என்றால் 90 மற்றும் 25
11025 என்றால் 110 மற்றும் 25
13225 என்றால் 132 மற்றும் 25
சுருக்கமாகச் சொன்னால் 25 ஒரு பகுதி. மற்ற எண்கள் இன்னொரு பகுதி.
ஸ்டெப் - 2
ஒரு எண்ணை தொடர்ச்சியான இரு எண்களின் பெருக்கல் தொகையாக (Factor
) மாற்றத் தெரியவேண்டும்.
6 என்றால் 2 x 3
20 என்றால் 4 x 5
90 என்றால் 9 x 10
110 என்றால் 10 x 11
132 என்றால் 11 x 12
ஸ்டெப் - 3
25ல் முடிகின்ற எண்களின் ஸ்கொயர் ரூட்டை கண்டு பிடிக்கப் போகின்றோம். எனவே எப்போதுமே விடையின் வலது கடைசி இலக்கம் 5தான். இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்.
உதாரணம் : 1
225ன் ஸ்கொயர் ரூட் = 15
• 225ஐ 2 மற்றும் 25 என பிரித்துக் கொள்ளுங்கள்
• 2 என்றால் 1 x 2
• 1 விடையின் இடது பகுதி
• 5 விடையின் வலது பகுதி
• இரு பகுதிகளையும் இணைத்தால் 15. இதுதான் விடை
உதாரணம் : 2
625ன் ஸ்கொயர் ரூட் = 25
• 625ஐ 6 மற்றும் 25 என பிரித்துக் கொள்ளுங்கள்
• 6 என்றால் 2 x 3
• 2 விடையின் இடது பகுதி
• 5 விடையின் வலது பகுதி
• இரு பகுதிகளையும் இணைத்தால் 25. இதுதான் விடை
உதாரணம் : 3
2025ன் ஸ்கொயர் ரூட் = 45
• 2025ஐ 20 மற்றும் 25 என பிரித்துக் கொள்ளுங்கள்
• 20 என்றால் 4 x 5
• 4 விடையின் இடது பகுதி
• 5 விடையின் வலது பகுதி
• இரு பகுதிகளையும் இணைத்தால் 45. இதுதான் விடை
உதாரணம் : 4
9025ன் ஸ்கொயர் ரூட் = 95
• 9025ஐ 90 மற்றும் 25 என பிரித்துக் கொள்ளுங்கள்
• 90 என்றால் 9 x 10
• 9 விடையின் இடது பகுதி
• 5 விடையின் வலது பகுதி
• இரு பகுதிகளையும் இணைத்தால் 95. இதுதான் விடை
உதாரணம் : 5
11025ன் ஸ்கொயர் ரூட் = 105
• 11025ஐ 110 மற்றும் 25 என பிரித்துக் கொள்ளுங்கள்
• 110 என்றால் 10 x 11
• 10 விடையின் இடது பகுதி
• 5 விடையின் வலது பகுதி
• இரு பகுதிகளையும் இணைத்தால் 25. இதுதான் விடை
குறிப்பு :
மீண்டும் சொல்கிறேன். 25ல் முடிகின்ற எண்கள் என்பதால் எப்போதுமே விடையின் வலது பகுதி 5தான்.
இந்த மின்னல் டெக்னிக்கை நமக்கு அறிமுகப்படுத்தியுள்ள ஆர்.வந்தனாவைப் போல நீங்களும் புதுப்புது உத்திகளை முயற்சிக்கலாம். எளிதாக இருந்தால் மின்னல் கணிதம் பகுதிக்கு எழுதி அனுப்பி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.