Monday, December 1, 2008

04. இரு இலக்க எண்களை 9ஆல் வகுத்தல்

பொதுவாக கூட்டல், கழித்தல், பெருக்கல் என எதுவென்றாலும் கணக்குப் புலிகள் பாய்வார்கள். ஆனால் வகுத்தல் என்றால் பதுங்குவார்கள். அதனால் நான் இப்போது உங்களுக்கு வகுத்தல் சொல்லித் தரப்போகிறேன். மின்னல் கணிதம் தெரிந்துவிட்டால் எல்லாமே ஜெட் வேக பாய்ச்சல்தான். எலிகள் கூட புலிகள் ஆகிவிடுவார்கள். சில உதாரணங்களை பார்க்கலாம்.

42 / 9
  • இடது இலக்கம் 4. வலது இலக்கம் 2.
  • இடது இலக்கம் 4.
    இதுதான் ஈவு (Quotient)
  • இடது இலக்கத்துடன் வலது இலக்கத்தை கூட்டுங்கள் 4 + 2 = 6.
    இதுதான் மீதி.(Reminder)
  • ஈவு 4, மீதி 6
என்ன சார் இது? அவ்வளவு தானா? இவ்வளவு சீக்கிரம் விடையா? என்று அதிசயிக்காதீர்கள். அடுத்த உதாரணத்தையும் செய்து பார்த்து மற்றவர்களை அதிசயப்பட வையுங்கள்.

23 / 9
  • இடது இலக்கம் 2. வலது இலக்கம் 3.
  • இடது இலக்கம் 2.
    இதுதான் ஈவு (Quotient)
  • இடது இலக்கத்துடன் வலது இலக்கத்தை கூட்டுங்கள் 2 + 3 = 5.
    இதுதான் மீதி.(Reminder)
  • ஈவு 2, மீதி 5
மின்னல் கணிதம் பேருக்கேத்த மாதிரியே, மின்னல் வேகம்தான். சொடக்கு போடறதுக்குள்ள கணக்கு போட்டுறலாம். என்கிட்ட படித்த வாண்டுகளுக்கு இந்த டெக்னிக் ரொம்ப பிடிக்கும். நான் கணக்கை சொன்ன அடுத்த வினாடியே விடையை சொல்லிடுவாங்க. நீங்களும் ஒரு வினாடிக்குள்ள விடையை சொல்ல முயற்சி பண்ணுங்க.

35 / 9
  • இடது இலக்கம் 3. வலது இலக்கம் 5.
  • இடது இலக்கம் 3.
    இதுதான் ஈவு. (Quotient)
  • இடது இலக்கத்துடன் வலது இலக்கத்தை கூட்டுங்கள் 3 + 5 = 8.
    இதுதான் மீதி.(Reminder)
  • ஈவு 3, மீதி 8
இதே ஜெட் வேகத்துல இன்னொரு உதாரணத்தையும் பார்த்துடலாமா?

52 / 9
  • இடது இலக்கம் 5. வலது இலக்கம் 2.
  • இடது இலக்கம் 5.
    இதுதான் ஈவு (Quotient)
  • இடது இலக்கத்துடன் வலது இலக்கத்தை கூட்டுங்கள் 5 + 2 = 7.
    இதுதான் மீதி.(Reminder)
  • ஈவு 5, மீதி 7
நல்லாத்தான் இருக்கு. ஆனா 47/9ஐ எப்படி போடறது. 4ஐயும் 7ஐயும் கூட்டினா 11 வருதேன்னு கேட்கறீங்களா? நல்ல கேள்வி. எனக்கு கேள்வி கேட்கறவங்களை பிடிக்கும். என்னுடைய வகுப்பில் எல்லா மாணவர்களும் கேள்வி கேட்க வேண்டும். கேள்வி கேட்பவன் மக்கு, தெரியாது என்று சொல்பவன் முட்டாள் என்ற எண்ணங்கள் தப்பு. கேள்வி கேட்டால்தான் பதில் கிடைக்கும். தெரியாது என்று தைரியமாக ஒப்புக்கொள்பவன், எளிதாக எதையும் தெரிந்து கொள்வான். இதை நான் என்னுடைய வகுப்பில் அடிக்கடி அனைத்து மாணவர்களுக்கும் சொல்வேன்.

சரி, இப்போ கொஞ்சம் கடினமான ஒரு உதாரணத்தை பார்க்கலாம்.

அதற்கு முன் ஒரு சிறு விளக்கம். வலது, இடது இலக்கங்களை கூட்டும்போது விடை 9ஐ விட சிறியதாக இருந்தால் அதுதான் மீதி. 9க்கு சமமாக அல்லது பெரியதாக இருந்தால் அதிலிருந்து 9ஐ கழித்துவிட வேண்டும். உதாரணமாக 4+7 = 11. இது 9ஐ விட பெரியதாக இருக்கிறது. எனவே 11 - 9 = 2. இதுதான் மீதி. இன்னொரு உதாரணத்தையும் பார்த்துவிடலாம். 6+3 = 9. இந்த விடை 9க்கு சமம். எனவே 9 - 9 = 0. இதுதான் மீதி.

63 / 9
  • இடது இலக்கம் 6. வலது இலக்கம் 3.
  • இடது இலக்கத்துடன் வலது இலக்கத்தை கூட்டுங்கள் 6 + 3 = 9.
  • இதிலிருந்து 9ஐ கழியுங்கள் 9 - 9 = 0.
    இதுதான் மீதி.(Reminder)
  • இடது இலக்கத்துடன் 1ஐ கூட்டுங்கள் 6 + 1 = 7.
    இதுதான் ஈவு (Quotient)
  • ஈவு 7, மீதி 0
இன்னும் கொஞ்சம் கடினமான ஒரு எண்ணை வகுத்துப் பார்ப்போம்.

47 / 9
  • இடது இலக்கம் 4. வலது இலக்கம் 7.
  • இடது இலக்கத்துடன் வலது இலக்கத்தை கூட்டுங்கள் 4 + 7 = 11.
  • இதிலிருந்து 9ஐ கழியுங்கள் 11 - 9 = 2.
    இதுதான் மீதி.(Reminder)
  • இடது இலக்கத்துடன் 1ஐ கூட்டுங்கள் 4 + 1 = 5.
    இதுதான் ஈவு (Quotient)
  • ஈவு 5, மீதி 2
வலது, இடது இலக்கங்களை கூட்டியதால் வந்த விடை 11. இது 9ஐ விட பெரியது என்பதால் அதிலிருந்து 9ஐ கழித்தோம். எத்தனை முறை கழித்தோம்? ஒரு முறை கழித்தோம். ஒரு முறை கழித்ததால் இடது இலக்கத்துடன் ஒன்றை கூட்டிவிட்டோம். ஓ.கே! புரிகிறது. ஒரு வேளை இருமுறை ஒன்பதை கழிக்க நேர்ந்தால். வாய்ப்பே இல்லை. எப்போதும் 9ஐ இரு முறை கழிப்பது போல எண்களே வராது. புரிந்ததா? சரி, இனி இதே பாய்ச்சல் வேகத்தில் இன்னொரு உதாரணம் பார்க்கலாமா?

98 / 9
  • இடது இலக்கம் 9. வலது இலக்கம் 8.
  • இடது இலக்கத்துடன் வலது இலக்கத்தை கூட்டுங்கள் 9 + 8 = 17.
  • இதிலிருந்து 9ஐ கழியுங்கள் 17 - 9 = 8.
    இதுதான் மீதி.(Reminder)
  • இடது இலக்கத்துடன் 1ஐ கூட்டுங்கள் 9 + 1 = 10.
    இதுதான் ஈவு (Quotient)
  • ஈவு 10, மீதி 8
இனி என்ன? வழக்கம் போல ஸ்டாப் கிளாக்கை எடுங்கள். பின் வரும் கணக்குகளை முயற்சி செய்து உங்களை நீங்களே வேகத்தில் மிஞ்சுங்கள். பிறகு உங்கள் நண்பர்களுக்கு சவால் விடுங்கள். மறந்துவிடாதீர்கள். நொடிகளில் விடை! இதுதான் மின்னல் கணிதம்.

88 / 9 = ?
14 / 9 = ?
61 / 9 = ?
79 / 9 = ?
94 / 9 = ?
56 / 9 = ?
33 / 9 = ?
45 / 9 = ?
97 / 9 = ?
81 / 9 = ?
71 / 9 = ?


விசித்திர எண்கள்
111,111,111 ஐ அதே எண்ணால் பெருக்கினால் சுவாரசியமான விடை வரும்.
111,111,111 x 111,111,111 = 12,345,678,987,654,321

No comments: